புலிப் பூச்சாண்டிக் கதை | சிங்கள மக்கள் மத்தியில் இனி எடுபடாது

0

ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பை இன்னமும் தீவிரப்படுத்த ஸ்ரீலங்கா இராணுவம் திட்டம் தீட்டியுள்ளது. ஸ்ரீலங்கா இராணுவத்தின் இனவழிப்புக்கு தண்டனையை வழங்காவிட்டால் இனவழிப்பை இன்னும் உச்சம் பெறும்.

கமால் குணரட்ண புதுக்கதை

“புலி ஆதரவுக் குழுக்களால் ஸ்ரீலங்கா அரசுக்கு கணிசமான அச்சுறுத்தல் என்று ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தமிழ் இனப்படுகொலையாளியுமான கமால் குணரத்ன புதுக் கதை ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளார். அண்மையில் ஜெனரல் சேர் கொத்தலாவல இராணுவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மத்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் வாயிலாக தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுக்கு ஆபத்து என்ற தோரணையில் சிங்கள இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை ஊக்குவித்து தீவிரப்படுத்தும் நோக்கில் இவ்வாறு இராணுவத்தினர் மத்தியில் கமால் குணரத்ன பேசியுள்ளமை ஸ்ரீலங்கா அரசினது தமிழ் இனத்திற்கு எதிரான இராணுவ மற்றும் இனவழிப்புச் சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.

ஏன் இந்தப் புதுக்கதை?

ஸ்ரீலங்கா அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. மக்கள் பசியாலும் பஞ்சாலும் வாடி வதங்குகின்றனர். நாடு முழுவதும் மக்கள் உணவுப் பொருட்களுக்காகவும் எரிவாயு, எரிபொருள் என அடிப்படைத் தேவைப் பொருட்களுக்காகவும் வரிசையில் நின்று ஸ்ரீலங்கா அரசின் மீது பெரும் கோவத்தில் உள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக கடும் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

டொலர் பற்றாக்குறை, சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி, அரச இயந்திரத்தை இயக்க முடியாத நெருக்கடி நிலை என்று ஸ்ரீலங்காவில் ஒரு அரசும் அதன் கட்டமைப்பும் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் நெருக்கடியை உருவாக்கியுள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பை அமிழ்த்துவதற்காக ஸ்ரீலங்கா அரசும் அதன் இராணுவமும் புலிப் பூச்சாண்டிக் கதையைக் கூறி சிங்கள மக்களை ஏமாற்ற முயல்கிறது.

மே 18 தாக்குதல் என் பொய்ப் பிரசாரம்

இந்த நிலையில் கடந்த மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதலை நடாத்த திட்டம் இட்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வு இந்திய ஊடகங்களில் செய்தியை பரப்பியிருந்தது. அதன் பொய்மை குறித்து அன்றைய நாட்களில் சுட்டிக்காட்டினோம்.

அத்துடன் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது என்பதன் பின்னர் விடுதலைப் புலிகள் சார்பில் ஒரு வெடி ஒலிகூட எழுந்ததில்லை என்றும் சொன்ன சொல்லை காப்பாற்றும் உன்னதமான விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பெயர் பெற்றவர்கள்.

 சிங்கள மக்கள் செருப்படி

இதேவேளை, இவ்வாறு ஸ்ரீலங்கா அரசு உருவாக்கிய புலிப் பூச்சாண்டிக் கதைக்கு சிங்கள மக்கள் செருப்படி வழங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் அப்படியானவர்கள் அல்ல என்றும் அவர்கள் 2009 மே 18ஆம் திகதிக்குப் பின்னர் தம் வார்த்தைக்கு ஏற்ப வாழ்ந்து வருவதாகவும் இன்றைய அவர்களின் நிலைமையை நாம் நன்றாக அறிவோம் என்றும் புலித் தாக்குதல் என்ற பொய் பிரச்சாரத்திற்கு சிங்கள மக்கள் தெளிவான பதிலை வழங்கியமை வரலாற்றுச் சிறப்பு நிகழ்வாகும்.

எனவே கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்தமை போன்று இனியும் மக்களை முட்டாளாக்கும் அரசியல் விளையாட்டு மேற்கொள்ள முடியாது என்பதை சிங்கள மக்களின் செருப்படி ஸ்ரீலங்கா அரசுக்கு நன்றாகத் தெரியப்படுத்திய போதும் கையறு நிலையில் இப்போது கமால் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

யார் இந்த கமால் குணரத்ன

ஸ்ரீலங்கா இனவழிப்பு இராணுவத்தின் 53ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்த ஜெனரல் கமால் குணரத்தின முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது நடைபெற்ற மனித குல விரோதக் குற்றங்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திய பாரிய இனப்படுகொலையாளி ஆவார். இவர் யுத்த களத்தில் நின்று தமிழ் இன விரோத நோக்கில் பல்வேறு இனப்படுகொலைக் குற்றங்களுக்கு கட்டளையிட்டவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் தலைவரும் தமிழீழத் தேசியத் தலைவருமாக வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறுதி மகனான பச்சிளம் சிறுவன், பாலச்சந்திரனை கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனையின் அடிப்படையில் மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்து தடையங்கள் தெரியாமல் அழிப்பதற்கான கட்டளையை இவர் வழங்கிய பாரிய குற்றவாளியாவார்.

நீதியே எல்லாவற்றுக்கான தீர்வு

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போர் 2009 மே மாதத்துடன் முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டாலும் ஸ்ரீலங்கா அரசு தனது இராணுவத்தையும் பிற அரச இயந்திரத்தையும் கொண்டு ஈழத் தமிழ் மக்களை அழித்து வருகின்றமையை இலங்கையின் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பாரிய பொருளாதார நெருக்கடி சூழலின்போதும்கூட தமிழினத்தை அழிக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஸ்ரீலங்கா அரசினதும் அதன் இராணுவத்தினதும் தமிழ் இன அழிப்பை நிறுத்த வேண்டுமாக இருந்தால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வாயிலாக உடன் நீதியை வழங்க வேண்டும் என்றும் அதுவே எல்லாவற்றுக்குமான தீர்வு என்றும் வலியுறுத்தி நிற்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.